கொட்டக்கலை இலங்கை பாரம்பரியக் கலையாக விளங்கும் சிலம்பக் கலை இன்று சர்வதேச அரங்கில் திகழ்வதற்கு அடித்தளம் அமைத்த சிலம்ப அரங்கேற்ற விழா மற்றும் விருது வழங்கும் விழா கொட்டக்கலை பகுதியில் உள்ள ரிஷிகேஷ் மண்டபத்தில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவை இலங்கை சிலம்பம் சம்மேளனம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
விழாவிற்கு தலைமை தாங்கியவர் கந்தசாமி நாயுடு அவர்கள்.
விழா ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர் கலாரத்ன விபூசனன், ஆசான் ரா. திவாகரன் (அரச விருது பெற்ற சிலம்பக் கலைஞர்).
மாணவர்களின் சிறப்பான அரங்கேற்றம்
விழாவில் பங்கெடுத்த மாணவர்கள் பல்வேறு சிலம்பக் கலை வடிவங்களை அசத்திய ஆற்றலோடும் அழகோடும் வெளிப்படுத்தினர். அவர்களின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சுழலும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. சிலம்பக் கலை என்பது வெறும் போர்க்கலை மட்டுமல்லாமல், ஒழுக்கம், கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, உடல் மற்றும் மன வலிமையை வளர்க்கும் பாரம்பரியக் கல்வி என்பதை இந்த அரங்கேற்றங்கள் மீண்டும் வலியுறுத்தின.
விருது வழங்கல்
சிலம்பக் கலையின் வளர்ச்சிக்கு பங்களித்து வந்த சிலம்ப வீரர்களுக்கும், கலைஞர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விழாவில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, உழைப்பு அனைத்தும் கௌரவிக்கப்பட்டது. விருது பெற்றோர் மட்டுமின்றி, சிலம்பக் கலைப் பயிற்சியில் சிறந்து மாணவர்களும் பாராட்டுகளுடன் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் ரகு இந்திரகுமார் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.





















