நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்கிறது.
அரசியல் வருகைக்கு பின், முதல் முறையாக மாநாட்டில் உரையாற்றப்போகும் விஜய் என்ன சொல்லப்போகிறார்?, அவரது கட்சியின் கொள்கைகள் என்ன? என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடையே மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் முக்கியமான இன்னொரு விஷயம் மாநாட்டில் இருக்கிறது.அதுதான் கொள்கை.. விஜய் கட்சி ஆரம்பித்தாலும், அவரது அரசியல் எப்படி இருக்கும், இடதுசாரியா, வலதுசாரியா, அவரது கட்சியின் கொள்கைள் என்ன என்பதை விளக்கும் திருவிழாவாக நடைபெற போகிறது. விஜய் அரசியல் 2026 சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் நம்புகின்றன. 2005ல் விஜயகாந்த் ஆரம்பித்த போது இருந்த எதிர்பார்ப்பு விஜய்க்கு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இந்த மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் 25ம் தேதி அன்று காலை நடப்பட்டது. ராட்சத கிரேன் மூலமாக, தொழிலாளர்கள் இதை அங்கு நிறுவினார்கள். இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி இன்று பறக்க விடப்படுகிறது. கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கொடியை இன்று விஜய் தான் ஏற்ற உள்ளார்.